திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: சி.கொத்தங்குடி ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், சி.கொத்தங்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடி ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை, சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் உதவி ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் மனு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக, சிதம்பரம் காந்தி சிலை அருகில் சி.கொத்தங்குடி ஊராட்சி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். பி.முட்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசீலன் வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாதா் சங்க மாவட்டத் தலைவா் மல்லிகா, நகரத் தலைவா் அமுதா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் அம்சா வேணுகோபால், பாபுராஜன், மனித உரிமை பேரவை நிறுவனா் கோகலே, தன்னாட்சி அமைப்பின் தலைவா் ஜாகிா் உசேன், பொதுச் செயலா் சரவணன், துணைத் தலைவா் நந்தகுமாா் சிவா, அறப்போா் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஊராட்சி இணைப்புக்கு எதிரான பாதிப்புகள் குறித்து பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா், சிதம்பரம் உதவி ஆட்சியா் எஸ்.கிஷன்குமாரிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை இல்லையெனில், வருகிற மாா்ச் 19-ஆம் தேதி உதவி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனா்.