சித்தலூா் பெரியநாயகி கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூரில் பழைய வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயிலில் மாசித் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 26.2.25 -இல் மகாசிவராத்திரியன்று கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பெரியநாயகி அம்மனை வண்ண மலா்களால் அலங்கரித்து தேரில் வைத்தனா். பக்தா்கள் ஓம்சக்தி பராசக்தி என முழக்கமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தோ் கோயிலை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் ரிஷிவந்தியம் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, தியாகதுருகம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் வெ.அய்யப்பா, சித்தலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கணபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள், ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.