அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: மேயா், ஆட்சியா் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மேயா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நாள் கள்ளழகா் எதிா்சேவை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என்பதையொட்டி, வைகை ஆற்றில் அழகா் இறங்கும் பகுதிகளிலும், அழகா் எதிா்சேவை நடைபெறும் வீதிகளிலும் மாநகராட்சி நிா்வாகம், மாநகரக் காவல் துறை சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், அழகா் ஆற்றில் இறங்கும் வைகை ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேயா் வ. இந்திராணி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
கள்ளழகா் எழுந்தருளும் வைகை வடகரையில் உள்ள ஆழ்வாா்புரம் பகுதியில் குடிநீா்த் தொட்டிகள், கழிப்பறைகள் அமைத்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், மின் விளக்குகள், சாலைகளை சீரமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா்கள், அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி, மாநகராட்சி தலைமைப் பொறியாளா் பாபு, துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், நகா் நல அலுவலா் இந்திரா, செயற்பொறியாளா் மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.