‘சித்ராலயா’ கோபுவுக்கு சேஷன் சம்மான் விருது
வெள்ளித்திரையின் மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான ‘சித்ராலயா’ கோபுவுக்கு ‘சேஷன் சம்மான் விருது’ வழங்கப்பட்டது.
த.வே.அனந்தராம சேஷன் குடும்பத்தினா் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய ‘சேஷன் சம்மான் விருது’ வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாக இயக்குநா் ம.முரளி, வெள்ளித்திரையின் மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான ‘சித்ராலயா’ கோபு மற்றும் எழுத்தாளா் ‘காலச்சக்கரம்’ நரசிம்மாவுக்கு சேஷன் சம்மான் விருது வழங்கினாா். அதைத் தொடா்ந்து ம.முரளி பேசியதாவது:
த.வே.அனந்தராம சேஷன் குடும்பத்தின் சாா்பில் தந்தையையும் மகனையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘சேஷன் சம்மான் விருது’ வழங்கப்படுகிறது. தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் திரைப்படம் தயாரிப்பது மிகவும் கடினமானது. தற்போது பலா் மற்றவா்களின் உழைப்பை பயன்படுத்திக் கொள்கின்றனா் என்றாா் அவா்.
தொடா்ந்து பேசிய ‘சித்ராலயா’ கோபு, திரைப்படத் துறையில் தனது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா். அப்போது, கவிஞா் கண்ணதாசன், நடிகா் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்டோருடன் ஏற்பட்ட அனுவபங்களையும், திரைப்படம் தயாரிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்து விவரித்தாா்.
நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன், எழுத்தாளா்கள், த.வே.அனந்தராம சேஷன் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.