அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: `3 அணிக்குமே ஓட்டு போடுங்க' வித்தியாசமாக வாக்கு கேட்கும் ஆர்த்தி
ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பிஸியாக இருக்கின்றனர் சீரியல் நடிகர் நடிகைகள்.
தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.
தற்போது செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட் கடைசி நேரத்தில் போட்டியிட மறுத்து விட்டதால் அவருக்குப் பதில் நிரோஷா செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்
'மூன்று அணிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளைக் கொண்டு எனது தலைமையின் கீழ் சிறந்த நிர்வாகத்தைத் தருவேன்' எனச் சொல்லி உறுப்பினர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் ஆர்த்தி.
'உறுப்பினர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் தனி ஒரு அணி உருவாக்கியிருக்கலாமே, எதிர் அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எப்படி ஒத்துழைப்பு தருவார்கள்? வாக்கு சேகரிப்பே வித்தியாசமாக இருக்கிறதே' என்ற கேள்வியுடன் ஆர்த்தியிடம் பேசினோம்.

''சின்னத்திரை நடிகர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்துல நடந்த ஒரு தேர்தல்ல நடிகர் அபிஷேக் தலைமையில் ஓர் அணியும் ராஜேந்திரன் தலைமையில் ஓர் அணியுமா போட்டியிட்டோம். அந்தத் தேர்தல்ல ராஜேந்திரன் சார் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிரணியில் நான் இணைச் செயலாளர் பதவிக்குத் தேர்வானேன்.
அந்தக் காலக்கட்டத்துல 'பை லா' கமிட்டியிலெல்லாம் இடம்பிடித்து என் கடமையைச் சரியாகவே செய்தேன். இருந்தாலும் பொதுவா ஒரு வழக்கம் இருக்கு. எதிரணியில் இருந்து ஜெயிச்சு வர்றவங்களுக்கும் வெற்றி பெற்ற அணிக்கும் இடையில் ஒருவித இடைவெளி அதுவாகவே விழுந்துதிடுது.
இதுலதான் எனக்கு உடன்பாடில்ல. சங்கம்ங்கிறது உறுப்பினர்கள் எல்லாருடைய நலனுக்காகத்தான். தேர்தல்ல போட்டியிடுகிற எல்லாரும் உறுப்பினர்களுக்கு நல்லது செய்யத்தான் போட்டியிடுறாங்க.
அவங்களுக்கிடையிலான போட்டி தேர்தலுடன் முடிவுக்கு வந்துட்டாதான் நல்லது. இல்லாம தொடர்ந்துச்சுன்னா அது சங்கத்துக்கே நல்லதில்ல.

அதனாலதான் அணி அமைக்க எனக்கு விருப்பமில்லை. இப்பவும் போட்டியிடுகிற எல்லா அணிகள்ல இருந்தும் என்னைக் கூப்பிட்டாங்க. ஆனா நான்தான் மறுத்துட்டேன். என் கணவர் கணேஷுமே இந்த விஷயத்துல எனக்கு ஆதரவா இருக்கிறதாலதான் அவரும் துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாதான் போட்டியிடுறார்.
இப்ப பார்த்தீங்கன்னா ஒவ்வொரு அணியிலும் சிறப்பா செயல்படுகிறவங்க இருக்காங்க .யார் யார் தேர்வாகுறாங்களோ அவங்களை ஒரு குழுவா வழிநடத்தி நிர்வாகத்தைக் கொண்டு போக நினைக்கிறேன். நான் எந்த அணி சார்பாகவும் தேர்தல்ல நிக்காததால் ஜெயிக்கிற எல்லாருமே எங்கூட சேர்ந்து ஒர்க் பண்ண தயக்கம் காட்டமாட்டாங்கன்னு நினைக்கிறேன். நானும் எந்த அணியைச் சேர்ந்த யாரையும் போட்டியா நினைக்கல. அதனால தலைவரா ஜெயிச்சா எல்லாருடனும் சேர்ந்து சங்கத்துக்கு என்னால் முடிஞ்ச நல்லதை செய்வேன்'' என்றவரிடம், நடிகர் எஸ்.வி.சேகர் தலைமையில் இயங்கி வந்த சீரியல் நடிகர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்தீர்கள். அவர் தற்போது பரத் தலைமையிலான அணிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருக்கிறாரே' என்ற கேள்வியை முன்வைத்தோம்.
'எனக்கு கூட ராதாரவி சார் நளினி அம்மா ரெண்டு பேரும்தான் ஆதரவு கையெழுத்துப் போட்டு கொடுத்தாங்க. ஆனா நாம என்ன செய்யப் போறோம்னு சொல்லி வாக்கு கேக்க தெரியாதவங்கதான் அடுத்தவங்ககிட்ட பேசச்சொல்லி வீடியோ வாங்கிப் போடுவாங்க. என்னைப் பொறுத்தவரை எனக்கு நேரடியா உறுப்பினர்களை அணுகத் தெரியும். அதனால இதைப்பத்தியெல்லாம் கவலைப் படல' என்கிறார்.