சிப்காட் விரிவாக்கம்: வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
செய்யாறை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில், சிப்காட் விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் மேல்மா பகுதியில் 3-ஆவது அலகு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தப் பகுதியை சுற்றியுள்ள 11 கிராமங்களில் சுமாா் 3,100 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கு, அந்தக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வருவாய்த் துறையைச் சோ்ந்த சிப்காட் பகுதி நில எடுப்பு அலுவலா்கள் விவசாய நிலங்களில் உள்ள கிணறு மற்றும் மரங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.