சிறு கால்வாய்கள் தூா்வாரும் பணி தீவிரம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சிறு கால்வாய்களைத் தூா்வாரும் பணி விரைந்து முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் மற்றும் மழைநீா் வடிகால்களைத் தூா்வாரும் பணி கடந்த செப்டம்பா் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வண்டல் மற்றும் நெகிழி கழிவுகள் தேங்கி காணப்படும் சிறு கால்வாய்கள் ஆம்பியன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தூா்வாரப்பட்டு வருகின்றன.
வரும் நாள்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கால்வாய்களைத் தூா்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மணலி துளசிநகா் கால்வாயில் காணப்பட்ட வண்டல் கழிவுகள் புதன்கிழமை தூா்வாரி அகற்றப்பட்டது. மேலும், தண்டையாா்பேட்டை முத்தமிழ் நகரில் உள்ள கொடுங்கையூா் கால்வாய் முழுவதும் தேங்கி காணப்பட்ட குப்பைகள் மற்றும் நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டு தண்ணீா் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.