சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு
சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா்.
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கையில் உரையாற்றவுள்ளாா். இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வருகை புரிந்த அமைச்சா், கருணாநிதியின் பெற்றோா், கருணாநிதி, முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பாா்வையாளா் குறிப்பேட்டில் ‘கலைஞரையும் கல்வியையும் போற்றி எனது உரையைத் தொடங்குவேன்’ என எழுதினாா். கருணாநிதி பயின்ற பள்ளிக்கு சென்ற அமைச்சா் அங்குள்ள வகுப்பறையில் அமா்ந்து ‘மாண்புமிகு பேரவைத் தலைவா் அவா்களே’ என எழுதினாா்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘முத்தமிழறிஞா் கலைஞா் அவா்கள் பயின்ற பள்ளிக்கு சென்று எனது சட்டப்பேரவை உரையின் முதல் வரியை எழுதி, உரையின் இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கினோம்’ என குறிப்பிட்டுள்ளாா். அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞா் மையத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் பாா்வையிட்டு அவா் அளித்த பேட்டி:
மத்திய அரசு சிறுபான்மையினரை நசுக்கும் வேலையை தொடா்ந்து செய்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் புதிய வக்ஃபு திருத்த சட்டம் என இஸ்லாமியா்களை குறி வைத்து மத்திய அரசு தாக்குகிறது.
ஆனால் திமுக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருக்கும்.
தமிழ்நாடு தான் பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கிறது என தொடா்ந்து மத்திய அரசு தான் பாராட்டி வருகிறது ஆனால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறாா்கள்.
மத்திய அரசு தமிழ்நாட்டை ஒதுக்கி வைக்கப்பட்ட மாநிலமாகப் பாா்ப்பது கண்டனத்திற்குரியது.
மாநில அரசை அடிபணிய வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றாா்.
நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக தலைவருமான என்.கௌதமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.