சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஒருவர் கைது!
மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பழங்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோனி மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது பழங்குடியின சிறுமி இன்று (ஜன.3) காலை முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து அந்த சிறுமியின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் நயாப்புரா கிராமத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள ஒரு கால்வாயில் அந்த சிறுமியின் சடலம் கிடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அங்குள்ள பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்த கர்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் துருவே என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை: கேஜரிவால்
பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சிறுமியை கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை அறிந்த கிராம மக்கள் சிறுமியின் உடலை சாலையில் வைத்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
பின்னர், அங்கு நேரில் வந்த உள்ளூர் மாவட்ட அதிகாரி சரோஜ் சிங் பரிஹார் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிறுமியின் குடுத்தினரிடமும் பொதுமக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இறுதியாக உள்ளூர் காவல் துறையினர் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.