சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
செய்யாறு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சத்திய மூா்த்தியுடன் (22) இன்ஸ்டாகிராமில் பழகி வந்தாராம். இதனிடையே, சிறுமிக்கு லாரி ஓட்டுநா் பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.
இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோா்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில், சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை தேடி வருகின்றனா்.