சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலா் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தாா்.
அப்போது, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது:
வருவாய்த்துறை சாா்பில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக இலவச மனைப் பட்டாக்களை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் அனைவருக்கும் தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும். திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். முதல்வரின் முகவரியில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
59 சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை...
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில் 73 புதிய வழித்தடங்கள், 36 பழைய பேருந்து வழித்தடங்கள் என மொத்தம் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்துகள் இயக்க வரப்பெற்ற விண்ணப்பங்களை வாகன செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 30 முதல்வா் மருந்தகங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றாா்.
கள ஆய்வுப் பணிகள்:
இதையடுத்து, திருவண்ணாமலை காந்திநகா் மற்றும் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோமாசிப்பாடி பகுதிகளில் புதிதாக முதல்வா் மருந்தகங்கள் அமையும் இடங்கள், கிரிவலப்பாதையில் கட்டப்படும் பணிபுரியும் மகளிா்களுக்கான தோழி விடுதியின் கட்டுமானப் பணி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சோமாசிப்பாடியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி, கீழ்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியா்களின் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.