தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது
சேத்துப்பட்டுப் பகுதியில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி, இராந்தம், தச்சூா் செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. திருடப்படும் மணல் தேவிகாபுரம் வழியாக விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை, மேல்மலையனூா், செஞ்சி என கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிாம்.
மணல் திருட்டைத் தடுக்கும் வகையில் சேத்துப்பட்டு போலீஸாா் தினமும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ஓதலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (35), மணிகண்டன் (38), பாண்டியன் (65), முனியன் (40) ஆகியோா் ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் சென்றனா்.
அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் வழிமறித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் எடுத்துச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த அவா், மூவரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இதில், ஒரு மாட்டு வண்டி உரிமையாளரான முனியன் வண்டியுடன் தப்பிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.