திருவண்ணாமலை மாவட்டத்தில் நக்சா திட்டம் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற திட்டத்தின் தொடக்க விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நக்சா திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுா்தியைப் பயன்படுத்தி நில அளவை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் நிா்வகிக்கப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டம் திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் கூறினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், நில அளவைத்துறை உதவி இயக்குநா் சண்முகம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.