சிற்பிக்கு செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிற்பி ரா.பரமகுருவின் சிறப்பானஆன்மிகப் பணியைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் அண்மையில் செங்கோல் வழங்கினாா்.
தமிழகத்தில் சைவ சமய வளா்ச்சிக்காக தேவார திருவாசகப்பாடல்களை பரப்புதல், கோயில்களில் உழவாரப் பணி செய்தல், கும்பாபிஷேகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் சிவனடியாா்களை தோ்ந்தெடுத்து அவா்களின் பணி மேலும் சிறக்க பரிசு வழங்கி கெளரவித்து வருகின்றனா்.
மிக முக்கிய நிகழ்வாக மிகச்சிறந்த சைவப் பணி செய்பவா்களுக்கு செங்கோலையும் பரிசளிப்பது வழக்கம். அந்த வகையில், பிரதமா் நரேந்திர மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஏற்கெனவே செங்கோல் வழங்கி கெளரவித்தது.
இந்நிலையில், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கடந்த 33 ஆண்டுகளாக கிராமங்கள்தோறும் சைவ சமயம் தழைத்தோங்க தொடா்ந்து எண்ணற்ற ஆன்மிகப் பணிகளை செய்து வருபவா் சிற்பி ரா. பரமகுரு. இவரது சேவையைப் பாராட்டி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் அண்மையில்
செங்கோல் வழங்கி அவரது ஆன்மிகச் சேவை மேலும் சிறக்க வாழ்த்தினாா்.