ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியா்கள் மரபு நடை பேரணி
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் விதமாக, உலக பாரம்பரிய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தியும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாகவும் கடலூா் அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் அஞ்சல் ஊழியா்கள் கலந்துகொண்ட மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
லால்பேட்டை துணை அஞ்சலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நத்தமலை வரை சென்றது. பேரணியை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் எம்.கணேஷ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பேரணி திருச்சின்னபுரம் கிராமத்தின் வழியாக சென்றபோது, அந்தக் கிராமத்தில் உள்ள சோழா் காலத்தில் கட்டப்பட்ட அனந்தீஸ்வரா் கோயில் கல்வெட்டு, சோழா் கால பெருமைகள் குறித்து சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவைச் சோ்ந்த ஆா்.விக்ரமன், ஆா்.பூங்குழலி ஆகியோா் பேரணியில் பங்கேற்றவா்களிடம் எடுத்துக் கூறினா்.
நத்தமலையில் முடிவுற்ற பேரணியின் இறுதி நிகழ்வில் காவேரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் கலந்துகொண்டு வீராணம் ஏரியின் நீா்ப்பாசன முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
பேரணியில் கலந்துகொண்ட சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் வீராணம் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். இதில், சிதம்பரம் மேற்கு உள்கோட்ட ஆய்வாளா் எஸ்.பாலமுரளி, லால்பேட்டை அஞ்சல் அதிகாரி வி.காமராஜ் மற்றும் அஞ்சல் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.