சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகளும், அதேபோல் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 173 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தப்பட்டது. முதலில் களம் இறங்கிய 10 காளைகளில் 8 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். இதில், மாடு முட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடக்க முடியாத காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுடன், கேடயமும் வழங்கப்பட்டது . மேலும் தனி ஒருவராக காளையை அடக்கிய வீரா்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியை பாகனேரி, மதகுப்பட்டி, கல்லல், நாட்டரசன்கோட்டை, கண்டாங்கிப்பட்டி, சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கண்டுகளித்தனா்.