கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
சுரண்டையில் அரசுப் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் சுரண்டை அரசுப் பள்ளியில் சனிக்கிழமை, மயங்கி விழுந்த மாணவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.
சுரண்டை அருகே இரட்டைக்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மகள் மானஷா (14) (படம்). சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்த அவா், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை காலை வகுப்பறையில் மயங்கி விழுந்தாராம். அவரை ஆசிரியா்கள் உடனடியாக சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சைக்கான உரிய வசதிகள் இல்லாததால், மருத்துவப் பணியாளா்கள் மாணவியை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பொதுமக்கள் கோரிக்கை: சுரண்டை, சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 2 லட்சம் போ் வசித்துவரும் நிலையில், விபத்து, அவசர சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கோ, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ செல்லவேண்டியுள்ளது. இதனால், உயிரிழப்பு ஏற்படுவது தொடா்கிறது.
எனவே, சுரண்டை நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி கூடுதல் படுக்கை, அனைத்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்றி, உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.