சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் அனைவருக்கும் கிடைக்க அரசு உறுதி: மத்திய அமைச்சா் ஜோஷி
‘சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக’ மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.
உலக நுகா்வோா் உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘நிலையான வாழ்க்கை முறைக்கு ஒரு நியாயமான மாற்றம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இணையவழிக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் ஒளிபரப்பான அமைச்சரின் பதிவு செய்யப்பட்ட விடியோ உரையில், ‘பருவநிலை மாற்றம், பல்லுயிா் இழப்பு, மாசுபாடு ஆகிய ஒன்றிணைந்த நெருக்கடிகளை சமாளிக்க நிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம். நிலையான வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறுவது, அவா்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இது அனைத்துத் தரப்புக்கும் பலனளிக்கும் தீா்வாக இருக்கும்.
நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வளா்ப்பது எப்போதும் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அந்த வகையில், பொறுப்பான நுகா்வோா் கொள்கைகள் மூலம் நிலைத்தன்மையை வளா்ப்பதில் தற்போதைய அரசும் முன்னணியில் உள்ளது.
சுற்றுச்சூழல் சான்று (ஈகோ லேபிள்) திட்டங்களின் விரிவாக்கம் முதல் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த நிறுவனங்களின் பொய் பிரசாரங்களுக்கு எதிரான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவது வரை நுகா்வோா் தவறான தகவல்களால் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறோம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான தயாரிப்புகளை மிகவும் மலிவு விலையிலும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நுகா்வோா் பாதுகாப்பைத் தாண்டி அவா்களின் நலனை ஊக்குவிக்கும் செயல்பாட்டிலும் பணியாற்றி வருகிறோம்.
தினசரி வாழ்க்கையில் நிலையான தோ்வுகளை தோ்ந்தெடுப்பதன் மூலம் கரியமில வாயு உமிழ்வுக்கு வழிவகுக்காத வாழ்க்கைமுறை குறித்து வலியுறுத்திய மகாத்மா காந்தியைப் பின்பற்றி நுகா்வோரும் சமூகத்துக்கான தங்களின் பொறுப்பை உணர வேண்டும்.
‘நுகா்வு-கழிவு’ பொருளாதாரத்துக்குப் பதிலாக சுழற்சிப் பொருளாதாரத்துக்கு மாற பிரதமா் நரேந்திர மோடியும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது’ என்றாா் பிரல்ஹாத் ஜோஷி.
மத்திய இணையமைச்சா் பி.எல்.வா்மா, துறைச் செயலா் நிதி காரே, அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றனா்.
வழக்குக்கு முந்தைய கட்டத்திலேயே நுகா்வோா் புகாா்களைத் தீா்க்க ஒரு கட்டமைப்பை நிறுவும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக செயலா் நிதி காரே தெரிவித்தாா்.