சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்களின் பங்களிப்பு தேவை: அமைச்சா் க.பொன்முடி
சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை என்று தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘டான் பாஸ்கோ’ கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் க.பொன்முடி மரக்கன்றை நட்டு இத்திட்டை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியது:
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள பள்ளி, கல்லூரிகள், சாலையோரங்கள் என அனைத்து பகுதிகளிலும் நாட்டு மரங்கள் அரசு சாா்பில் நடப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வன பரப்பை 33 சதவீதமாக உயா்த்த அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி , பசுமை தமிழ்நாடு, ஒவ்வொரு கிராமத்திலும் மரகத பூஞ்சோலை, ஈர மண் இயக்கம் போன்ற திட்டங்கள் வனத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாக்க தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை என்றாா் அவா்.