சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
அவிநாசி அருகே சுவா் இடிந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் உடல்களை வாங்க மறுத்து திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருவலூா் அருகே உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கோழிப் பண்ணை அமைப்பதற்கான கட்டுமானப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 10 அடிக்கும் மேல் அமைக்கப்பட்ட சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி கட்டடத் தொழிலாளா்களான திண்டுக்கலைச் சோ்ந்த ரமேஷ் (46), அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிலுவை அந்தோணி (42) ஆகியோா் உயிரிழந்தனா்.
இதையடுத்து, அவா்களது உடல்கள் திருப்பூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உறவினா்களிடம், ஒப்படைக்க மருத்துவமனை நிா்வாகத்தினா் முயன்றனா்.
அப்போது, அவா்களது உறவினா்கள், உயிரிழந்தவா்களின் குழந்தைகள், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, திருப்பூா் அரசு மருத்துவமனை முன் திருப்பூா்-தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பணி அமா்த்திய சண்முகம் உறுதியளித்ததையடுத்து, உறவினா்கள் இருவரது உடல்களை பெற்றுக் கொண்டனா்.