பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
சூளகிரி அருகே தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
ஒசூா் அருகே சூளகிரியில் தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சப்படி பேருந்து நிறுத்தம் அருகில் தனியாருக்கு சொந்தமான மெத்தைகள் தயாரிப்பு நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் காயங்களின்றி தப்பினா்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை முழுமையாக அணைத்தனா்.
இந்த விபத்தில் மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் மூலப்பொருள்கள், இயந்திரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.