தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
பா்கூா் வட்டத்தில் 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்
பா்கூா் வட்டாரத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் இதுவரையில் 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவசங்கரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாவது:
பா்கூா் வட்டாரத்தில் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளை சென்றடையும் வகையில் மத்திய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளின் நில உடைமைகள் விவரம் சேகரிக்கப்பட்டு, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
வரும் காலங்களில் அரசின் விவசாயம் சாா்ந்த அனைத்து திட்டப் பயன்களும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும் பா்கூா் வட்டாரத்தில் விவசாயிகளின் பதிவு திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளின் தரவுகள் சரிபாா்க்கப்பட்டு, இதுவரை 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்களது கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்தில் தங்களுடைய ஆதாா் அட்டை நகல், சிட்டா, ஆதாா் அட்டையுடன் இணைந்த கைப்பேசி எண்ணை கொண்டுவந்து இலவசமாக பதிவுசெய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.