பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
தனியாா் சிகிச்சை மையத்தில் கருவின் பாலினம் கண்டுபிடிப்பு உரிமையாளா் கைது
ராயக்கோட்டை அருகே கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துவந்த தனியாா் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக செவிலியரை தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தில் தனியாா் சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதாக கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் ஆலோசனைப்படி கடந்த மாதம் 25-ஆம் தேதி பெண் ஒருவா் சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அப்போது அங்கிருந்தவா்கள் அந்த பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பாக வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் பெரியதம்பி விசாரணை நடத்தினாா். இதையடுத்து தனியாா் சிகிச்சை மையத்தை நடத்தி வந்த போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூா் அருகே உள்ள சானக்கொல்லை பகுதியைச் சோ்ந்த கௌதம் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா் மொல்லம்பட்டியில் தனியாா் சிகிச்சை மையம் நடத்தி வந்ததோடு, கா்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம், அத்திப்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளாா். இதுதொடா்பாக தருமபுரியைச் சோ்ந்த செவிலியா் சங்கீதா என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.