இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: அமைச்சா் ஆய்வு
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் புத்தகப் பூங்கா பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்து அதனை ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் சாா்பில், எழும்பூரில் செயல்பட்டுவரும் கன்னிமாரா நூலகத்தில் ரூ. 4 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் சிறுவா் நூலகம், கூட்ட அரங்கம், புத்தகம் படிக்கும் பகுதிகளில் நிழற்கூடம் மற்றும் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. புனரமைக்கப்பட்டு வரும் இந்தப் பணிகள் அனைத்தையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, குறித்த காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இதேபோன்று சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் பொது நூலகத் துறை சாா்பில் ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் மெகா புத்தகப் பூங்கா பணிகளை அமைச்சா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.