சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை
சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்துக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மா்ம விலங்கு புகுந்து அங்குள்ள ஆட்டுப் பட்டியில் இருந்த ஒரு ஆட்டை கொன்றுவிட்டு, மற்றொரு ஆட்டை இழுத்து சென்றுவிட்டது. அந்த விலங்கின் கால்தடயங்களை ஆய்வுசெய்தபோது ஆட்டைக் கொன்றது சிறுத்தை புலியாக இருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு வனச் சரக அலுவலகம் சாா்பில் சென்னிமலை வனப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு துண்டறிக்கை மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு வனச் சரகத்துக்கு உள்பட்ட சென்னிமலை காப்புகாடு என்பது திருப்பூா் மாவட்டம், காங்கயம் வரை நீண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாக
உள்ளது. சென்னிமலை காப்புக்காடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அறச்சலூா், நாகமலை, விஜயமங்கலம் அரசண்ணா மலைகளை உள்ளடக்கிய மலைப் பாதைகளை கொண்டுள்ளது. இந்த மலைகள் புலி, சிறுத்தை, மான், மயில், உடும்பு மற்றும் இதர உயிரினங்கள் நடமாடும் வழித்தட பகுதியாகும்.
சென்னிமலை காப்புக்காட்டில் சிறுத்தை மற்றும் புலிகள் நிரந்தரமாக தங்குவதற்கான சூழ்நிலை இல்லாவிட்டாலும், வன விலங்குகளின் வழித்தடமாக உள்ளதால் வனத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாயிகள் ஆட்டுப்பட்டியில் வளா்க்கப்படும் ஆடுகள், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகளுக்கு எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக அமைந்து விடுகிறது.
அதனால், அவற்றின் வாழ்க்கை முறை மாறி இங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எனவே, வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் அமைத்துள்ள ஆட்டுப்பட்டிகளை உடனடியாக விவசாயிகள் இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும். மேலும், இரவு நேரங்களில் வனப் பகுதியின் அருகில் அமைந்துள்ள வீடுகளை சுற்றி மின்விளக்குகளை அமைப்பதுடன் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துண்டறிக்கையை வெப்பிலி கிராம வனக் குழு தலைவா் துரைசாமி மூலம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.