சென்னை: கலைஞர் பூங்காவா... பெருநகர மாநகராட்சிப் பூங்காவா? - சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க ஆபீஸர்ஸ்!
சென்னை அடையார் காந்தி நகர் 173-வது வார்டில் அமைந்துள்ளது, சென்னை பெருநகர மாநகராட்சி பூங்கா. கோட்டூர்புரம் ரயில் நிலையம், கல்லூரி, பிரபல பள்ளிகள் என்று அருகருகே அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இப்பூங்காவில் அதிகளவில் இருந்துகொண்டே இருக்கும் .
நடைபயிற்சி, ஓய்வு எடுக்க, இயற்கையை ரசிக்க என தினசரி நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பூங்காவின் பெயர்ப்பலகை, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் மற்ற மாநகராட்சி பூங்காக்களில் உள்ளது போன்று பூங்கா செயல்படும் நேரமும் இங்கு வெளியில் பார்வைக்கு வைக்கப்படவில்லை. இதனால் எதேச்சையாக பூங்காவை ரசிக்க வருபவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இது குறித்து பூங்கா பராமரிப்பு ஒப்பந்தக்காரர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ``பூங்காவை பராமரிப்பது மட்டுமே எங்கள் வேலை, மற்றபடி பெயர்ப்பலகை சம்பந்தமாக நீங்க அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்... ஏதோ பெயர் மாற்றம் செய்ய போறாங்க போலிருக்கிறது. அதனாலேயே பெயர்ப்பலகையை மூடி வைத்துள்ளோம் என்றார். பூங்கா திறந்திருக்கும் விவரங்கள் குறித்து கேட்டதற்கு, ``முன்னெல்லாம் காலை 6 - 10 மற்றும் மாலை 4 - 8 வரை மட்டுமே திறந்திருக்கும். தற்போது நாள் முழுக்க திறந்திருக்கிறது" என்றார்.
மேலும் இது குறித்து தகவல் அறிய, Zone 13-ன் ஏ.இ பாலாஜியிடம் கேட்டபோது, ``பூங்காவிற்கு பெயர் மாற்றம் செய்ய உள்ளதால் மேலதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் புதிய பெயர்ப்பலகை திறக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றவரிடம், `என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, ``அதெல்லாம் வெளிப்படையாக தற்போது சொல்ல முடியாது" என்றார். `கலைஞர் நூற்றாண்டு பூங்கா' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்களே என்று கேட்டதற்கு, ``ஆமாம்" என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.
சம்பந்தப்பட்ட வார்ட் 173 கவுன்சிலர் சுபாஷினியைத் தொடர்பு கொண்டபோது, பூங்காவிற்கு பெயர் மாற்றம் செய்வதை உறுதி செய்தார்.
``இந்தப் பூங்காவிற்கு மட்டுமே பெயர் மாற்றமா... அல்லது மாநகராட்சி பூங்காக்கள் அனைத்திற்குமே மாற்றப்போகிறார்களா" என்று கேட்டதற்கு, ``இதையெல்லாம் நீங்க மேயர் கிட்டத்தான் கேட்கவேண்டும்" என்றார் .
எது எப்படியோ, திட்டங்களுக்கு "கலைஞர் " பெயர் சூட்டுவது சம்பந்தமாக முதல்வருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தப் பூங்காவின் பெயர் மாற்றம் செய்யப்படவிருக்கிறது என்பது உறுதியாகிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பயன்படுத்தும் இந்தப் பூங்காவின் பயன்பாட்டு நேரமும் , பெயர்ப்பலகையும் திறக்கப்படும் நாளை பொது மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் .