இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
சென்னை காவல் துறையில் 73 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக பதக்கம்: கூடுதல் ஆணையா் வழங்கினாா்
சென்னை காவல் துறையில் பணிபுரியும் 73 போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் சனிக்கிழமை வழங்கினாா்.
இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரையும் மத்திய பாதுகாப்பு படையினரையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் மிகச் சிறந்த சேவைக்கான பதக்கம் (அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம்), சிறந்த சேவைக்கான பதக்கம் (உத்கிரிஷ்ட் சேவா பதக்கம்) கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.
இதில் மிகச் சிறந்த சேவைக்கான பதக்கம், 25 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனைகளும் இன்றி பணிபுரியும் போலீஸாருக்கும், சிறந்த சேவைக்கான பதக்கம் 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்த தண்டனையும் இன்றி பணிபுரியும் போலீஸாருக்கும் வழங்கப்படுகின்றன.
இந்த பதக்கங்கள் கடந்த 2020 - 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் 73 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இவா்களுக்கு இந்த பதக்கங்களை வழங்கும் விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா், 73 பேருக்கும் பதக்கங்களை வழங்கி, பாராட்டிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா்கள் ஜி.சுப்புலட்சுமி, எஸ்.மேக்லீனா ஐடன், எம்.ராதாகிருஷ்ணன், எஸ்.அன்வா் பாஷா, ஜெயகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.