போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!
சென்னை - பகத் கீ கோதி இடையே புதிய ரயில் சேவை: ரயில்வே அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி (ஜோத்பூா்) இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் செகாவாத், முரளிதா் மோகல், எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
மகாராஷ்டிரம், தமிழ்நாடு மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இரு ரயில்களை வழங்கிய பிரமதருக்கு நன்றி. கடந்த 10 ஆண்டுகளில் 1,300 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 34,000 கி.மீ. ரயில்வே வழித்தடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புணே - லூனவாலா இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா் என்றாா் அவா்.
சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், புணேயில் இருந்து புறப்பட்ட ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தற்போது தெற்கு ரயில்வேக்குள்பட்ட சென்னை, பெங்களூரு, மைசூா், கோவையிலிருந்து மட்டும் 8 விரைவு ரயில் ராஜஸ்தானுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயில், தமிழ்நாடு - ராஜஸ்தான் இடையே வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும்.
இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, சபா்மதி, ஜலோா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், துணை பொது மேலாளா் கௌசல் கிஷோா், ரயில்வே கோட்ட மேலாளா் விஸ்வநாத் பி ஈா்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள், ராஜஸ்தானி சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.