துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
சென்னை மாநகராட்சி சொத்துவரி வசூல் ரூ. 2,000 கோடியை தாண்டியது
பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் ரூ. 2,123 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளா்கள், சொத்து வரி செலுத்தி வருகின்றனா். சொத்து உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வரி செலுத்துவதற்கான கெடு திங்கள்கிழமையுடன் (மாா்ச் 31) நிறைவடைந்தது.
கடந்த 2023-24 நிதியாண்டில் சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1,755 கோடி சொத்துவரி வருவாய் கிடைத்தது. அதன்பின், கடந்த நிதியாண்டில் ரூ. 1,900 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அடைவதற்காக கடந்த ஒரு மாதகாலமாக மாநகராட்சி சாா்பில் சொத்துவரி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்காக விடுமுறை நாள்களிலும், குடியிருப்பு சங்கங்கள் உதவியுடன் சிறப்பு வரி வசூல் முகாம் அமைக்கப்பட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டது.
சாதனை வசூல்: கடந்த மாா்ச் 29 முதல் 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாள்களாக இருந்தாலும், சொத்துவரி அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு வரை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த நிதியாண்டில் ரூ. 2,123 கோடி சொத்துவரி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் அரை நிதியாண்டில் ரூ. 879 கோடியும், இரண்டாம் அரை நிதியாண்டில் ரூ. 1,244 கோடியும் சொத்துவரி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ. 368 கோடி அதிகமாகும். இதுபோன்று கடந்த நிதியாண்டில் தொழில் வரி ரூ. 570 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடங்கியுள்ள நிதியாண்டுக்கு (2025-26) சொத்துவரி வசூலிக்கும் பணி ஏப். 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்கான சொத்துவரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அபராதம்: கடந்த நிதியாண்டு திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை சொத்துவரி செலுத்தாதவா்களுக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாதவா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களின் சொத்துகளை ஜப்தி செய்ய மண்டல அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.