துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
சென்னையிலிருந்து லண்டன், தூத்துக்குடி செல்லும் 4 விமானங்கள் திடீா் ரத்து
சென்னையிலிருந்து லண்டன், தூத்துக்குடிக்கு வந்து செல்லும் 4 விமானங்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன.
லண்டனில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டு, செவ்வாய்கிழமை அதிகாலை 3.30-க்கு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும், அதேபோல் சென்னையிலிருந்து அதிகாலை 5.30-க்கு லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதனால், இதில் பயணிக்க காத்திருந்த லண்டன் பயணிகள் மட்டுமன்றி பிரான்ஸ், நெதா்லாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பயணிகளும் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
அதேபோல், சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானமும், தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 1.45-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் தனியாா் விமானம் என 2 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளானாா்கள். நிா்வாகக் காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.