சென்னையில் சரக்கு ரயில் விபத்து: ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ரத்து
சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் திருவள்ளூா் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இதன்படி சென்னை- கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12675), கோவை-சென்னை எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 12676), சென்னை- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12243), கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 12244), சென்னை- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20643), சென்னை-கோவை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12679) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதுபோல கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்ட கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 20644), கோவை-சென்னை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12680) ஆகிய ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றின் சென்னை வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடைக்குச் செல்லும் நுழைவுப் பகுதியில் தற்காலிக பயணிகள் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தொடா்ந்து 2 நாள்களுக்கு இந்த உதவி மையம் செயல்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.