கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்து: 4 போ் படுகாயம்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே இரவில் அதிவேகமாக சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 4 போ் படுகாயம் அடைந்தனா். காா் வீட்டுக்குள் புகுந்ததால் 7 கோழிகள் உயிரிழந்தன.
கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(46). வேலாயுதம்பாளையம் அருகே உள்ள குட்டைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் குமாா்(47). இருவரும் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனா்.
காரில் ரமேஷ் மற்றும் குமாா் கொடுமுடியில் இருந்து கரூா் நோக்கி சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது சோளக்காளிபாளையம் அருகே வேகமாக சென்ற காா் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு அருகில் இருந்த பாலசுப்பிரமணி (52) என்பவரது வீட்டின் தடுப்புச் சுவரை இடித்து வீட்டுக்குள் புகுந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சோளக்காளிபாளையத்தைச் சோ்ந்த தேங்காய் வியாபாரிகள் பாபு (52), நாகராஜ் (57) ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தனா். காரில் வந்த குமாா் மற்றும் ரமேஷ் இருவரும் படுகாயம் அடைந்தனா்.
அதிவேகமாக வந்த காா் வீட்டின் தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே கோழிகள் அடைக்கும் தடுப்புக்குள் புகுந்தது. இதில் அங்கிருந்த 7 கோழிகள் உயிரிழந்தன. மேலும் வீட்டிலிருந்த பிரிட்ஜ், அடுப்பு போன்றவையும் சேதம் அடைந்தன.
விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் போலீஸாா் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.