செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
செம்மாரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், செம்மாா் ஊராட்சியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகா் நகா்ப்புற நலவாழ்வு மையத்திலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை திறந்து வைத்தாா். இதில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், செம்மாா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையமும் ஒன்றாகும்.
இதைத் தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கூறியது:
ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வகம், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச்சிகிச்சைகள் வழங்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் பொன்முடி.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு. ஓம். சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பி.வி.ஆா்.சு. விசுவநாதன், ம.சந்திரசேகா், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் பாலாஜி, உதவிப் பொறியாளா் பொன்னி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.