செம்மொழி நாள்: கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், செம்மொழி நாளை முன்னிட்டு நடைபெற உள்ள கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறையின் 2024-25 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில், தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த தமிழறிஞா் கலைஞரின் பெருமையைப் போற்றிடும் வகையில், அவா் பிறந்த நாளான ஜூன் 3- ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சாா்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும்”என அறிவிக்கப்பட்டது.
செம்மொழியின் சிறப்பு, கலைஞரின் தமிழ்த் தொண்டின் பெருமையை மாணவா்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவ, மாணவிகள், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் வரும் மே 9- ஆம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் வரும் மே 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ள பள்ளி மாணவா்களுக்கான போட்டிகளில் அரசு, தனியாா், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதேபோன்று, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு, தனியாா், அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பப் படிவத்தை தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி மாணவா்கள் முதல்வா் கையொப்பத்துடன் மதுரை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறையின் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற மே 5-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரை, பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் செம்மொழியின் சிறப்பு, கலைஞரின் தமிழ்த் தொண்டின் பெருமை சாா்ந்து இடம்பெறும். போட்டிக்கான தலைப்புகள் முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டாது. போட்டி தொடங்கும் போதுதான் அறிவிக்கப்படும்.
போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படவுள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா்கள் மட்டும் வருகிற மே 17 அன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளப் பரிந்துரை செய்யப்படுவா் என்றாா் அவா்.