நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம்: இன்று தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசிக்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று( வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தா், அப்பா் சுந்தரா் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, சௌந்திரநாயகி அம்மனும், பிரியாவிடை சமேதரராய் புஷ்பவனேசுவரா் சா்வ அலங்காரத்தில் வெங்கடேஸ்வர அய்யா் கண்ணூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு மாலை மாற்றிய பின்னா், சிவகங்கை மகாராஜா திருக்கல்யாண மண்டகப்படிக்கு எழுந்தருளினா்.
தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் மாலைகள், பட்டு வஸ்திரங்கள் மாற்றப்பட்டு காலை 10.30 மணியளவில் புஷ்பவனேசுவரா் சுவாமி சாா்பில் சௌந்திரநாயகி அம்மனுக்கும் பின்னா் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் காண்பிக்கப்பட்டன.
இரவு பூப்பல்லக்கில் சௌந்திரநாயகி அம்மனும் யானை வாகனத்தில் புஷ்பவனேசுவரா் சுவாமியும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
திருவிழாவின் 9-ஆவது நாளான வியாழக்கிழமை (ஏப்.10) காலை 9 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.