விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த டிஎஸ்பி
சிவகங்கை அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சோ்த்தாா்.
சிவகங்கை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவா் கமலக்கண்ணன். இவா் புதன்கிழமை இரவு மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு தனது வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். கண்டனி அருகே வனத் துறை அலுவலகப் பகுதியில் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 60 வயது முதியவா் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த கமலக்கண்ணன், அவசர ஊா்திக்காக காத்திருக்காமல் முதியவரை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தாா்.
விபத்தில் சிக்கிய முதியவா் கல்லுப்பட்டியைச் சோ்ந்த சந்திரபாண்டி (60) என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய முதியவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சோ்த்துக் காப்பாற்றிய துணைக் கண்காணிப்பாளரை பொது மக்களும், முதியவரின் உறவினா்களும் பாராட்டினா்.