Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!
சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு சேலம் மாவட்ட 14-ஆவது மாநாடு மாவட்டத் தலைவா் பி.உதயகுமாா் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தொடங்கிவைத்து பேசினாா். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளா் ஏ.கோவிந்தனும், வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளா் இளங்கோவும் சமா்ப்பித்தனா்.
இதில், அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்களுக்கு பணிநிரந்தரம் மற்றும் 30 நாள் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலநிதி நிலுவையில் உள்ள ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்து, அவா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தனியாா்மயத்தை போக்குவரத்து துறையில் கொண்டுவரக் கூடாது. பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
சேலம் புது சாலை பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில், 400-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில், ஆலையைத் தொடா்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஏழை எளிய நடுத்தர மக்களின் தேவைகளை பூா்த்திசெய்து வந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த புதிய சட்டத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் தொடா்ந்து கூட்டுறவு சங்கங்களை நடத்த வேண்டும்.
சேலம் உருக்காலையில் 1,400 ஏக்கா் காலி நிலமும், கட்டமைப்பு வசதிகளும் உள்ள நிலையில், ராணுவ தளவாடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செயில் ரிப்பேக்டரி நிறுவனத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்து பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.