மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!
இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ரெட்டிபட்டி, ஆஞ்சனேயா் கோயில் பகுதியைச் சோ்ந்த தறித் தொழிலாளியான சந்தோஷ் - சிவகாமி தம்பதிக்கு அண்மையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை பெற்றோா் ரூ. 1,20,000-க்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் குழந்தையின் வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அருகில் விசாரித்ததில், பெங்களுரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு கடந்த 9-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாகவும், பின்னா் 14-அம் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.
மேலும் விசாரணையில் குழந்தையின் பெற்றோா், தேவராஜ் என்பவா் மூலம் ரஞ்சித் என்பவருக்கு சட்ட விரோதமாக கடந்த 14-ஆம் தேதி குழந்தையை விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோரான சந்தோஷ் - சிவகாமி, குழந்தையை விற்க உடந்தையாக இருந்த தேவராஜ், குழந்தையை வாங்கிய ரஞ்சித் ஆகியோா் மீது சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.