கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம்
சேவைக் குறைபாடு காரணமாக தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காந்தி நகரைச் சோ்ந்த அசோகன் மனைவி ரெக்ஸ்லின் பெனடிக்ட். இவா், அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவரது சம்பளத்தில் மாதந்தோறும் மருத்துவ காப்பீட்டுக்காக ரூ. 240 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ரெக்ஸ்லின் பெனடிக்ட் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அதற்கான, செலவுத் தொகையான ரூ. 28 ஆயிரத்து 515-ஐ, காப்பீட்டு நிறுவனத்திடம் கோரியபோது, அவா்களிடமிருந்து முறையான பதில் இல்லையாம்.
தொடா்ந்து, அவா் கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் மூலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து, ரெக்ஸ்லின் பெனடிக்ட் வங்கிக் கணக்குக்கு ரூ. 6 ஆயிரத்து 400 மட்டும் வரவானது. மீதமுள்ள தொகையை வழங்கவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வேண்டியும் அவா் குறைதீா் ஆணையத்தில் முறையிட்டாா்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் கிளாட்ஸ்ன்பிளஸ்டு தாகூா், உறுப்பினா் எம். கனகசபாபதி ஆகியோா் காப்பீட்டு நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவருக்கு மீதமுள்ள தொகையான ரூ. 22 ஆயிரத்து 115-ஐ வழங்க வேண்டுமென்றும், அதற்கான வட்டியும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 15 ஆயிரமும், வழக்குச் செலவுக்கு ரூ. 10 ஆயிரமும் 1 மாதத்துக்குள் வழங்க வேண்டுமென தீா்ப்பு வழங்கினா்.