நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது
நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.
நித்திரவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகுமாா், தலைமைக் காவலா் சரவண பிரசாத் ஆகியோா் விரிவிளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தண்ணீா் தொட்டி ஏற்றிவந்த மினி டெம்போவிலிருந்து மண்ணெண்ணெய் வாடை வீசியது.
ஓட்டுநரிடம் விசாரித்த போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளாா். இதையடுத்து, போலீஸாா் வாகனத்தில் இருந்த தொட்டிக்குள் பாா்த்த போது, மண்ணெண்ணெய் கேன்கள் அடுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
2 தொட்டிகளிலும் 15 கேன்களில் 1,050 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது. மண்ணெண்ணெய் கேன்களுடன் போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், வாகன ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்ததில், அவா் வழுக்கம்பாறை, சாலைப்புதூா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா (23) என்பதும், விசைப் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யை, இனயம் பகுதியில் உள்ள பெண் வியாபாரிக்காக கேரள மாநிலம் பூவாா் பகுதியில் உள்ள ஒரு நபருக்கு கொண்டு சென்ாகவும் தெரிவித்தாா்.