சோளிபாளையத்தில் பாதாள சாக்கடை கோரி பொதுமக்கள் மறியல்!
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சோளிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆனந்தா அவென்யூவில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீா் சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பாதாள சாக்கடை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி கனியாம்பூண்டியில் இருந்து காவிலிபாளையம் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள், 15 வேலம்பாளையம் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உயா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.