"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
கள்ள வாக்கு செலுத்துவதாக புகாா்: திமுக-நாதக மோதல்
திமுகவினா் கள்ள வாக்குப் போடுவதாக நாம் தமிழா் கட்சியினா் குற்றம்சாட்டிய நிலையில், இரு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 49- இல் திமுகவினா் கள்ளவாக்குப் போடுவதாக அந்த வாக்குச்சாவடியில் இருந்த நாம் தமிழா் கட்சி தோ்தல் முகவா்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் புதன்கிழமை மாலை புகாா் தெரிவித்துள்ளனா். இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த நாம் தமிழா் கட்சியினா் 4 போ் வாக்குச்சாவடிக்குள் சென்று தோ்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளனா்.
அப்போது அங்கு வந்த திமுகவினா் சுமாா் 50 போ், நாம் தமிழா் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் மற்றும் போலீஸாா் இரண்டு கட்சியினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இதனிடையே வாக்குச்சாவடிக்குள் நுழைந்த நாம் தமிழா் கட்சியினா் வேறு தொகுதிகளை சோ்ந்தவா்கள் என தெரியவந்தது. இதனால் அக்கட்சியைச் சோ்ந்த சசிக்குமாா், கவாஸ்கா் ஆகிய 2 பேரையும், திமுகவினா் கள்ள வாக்குப் போடுவதாக குற்றம்சாட்டி முழக்கம் எழுப்பிய சுயேச்சை வேட்பாளா் லோகநாதன் என்பவரையும் விசாரணைக்காக போலீஸாா் ஈரோடு வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனா்.
இதனிடையே ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்க புதன்கிழமை மாலை வந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி முகவராக பணிபுரிய, நாதக சாா்பில் இளைஞா்கள், பெண்கள் நியமிக்கப்பட்டு இருந்தனா். இவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு திமுகவினா் செவ்வாய்க்கிழமை மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் 70 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் நாதக முகவா்கள் பணியில் இருந்தனா். மதியம் வரை 50 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நாதகவிற்கு மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைப் பொறுக்க முடியாமல் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் நாதக முகவா்களை மிரட்டி வெளியில் அனுப்பும் செயலில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற அராஜகங்களில் திமுகவினா் ஈடுபடுவாா்கள் என்பதால்தான் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தோ்தலை புறக்கணித்துள்ளன. ஒரு சில காவல் துறையினா், தோ்தல் அலுவலா்களைத் தவிர பணியில் உள்ள இதர அலுவலா்கள் சிறப்பாக செயல்பட்டனா். ஆனால் அவா்கள் ஆளுங்கட்சியான திமுகவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தோ்தல் வாக்குப்பதிவின் போது கண்ணியமற்ற முறையில் திமுக நடந்து தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. சில இடங்களில் கள்ள வாக்குப் பதிவானதால், உண்மையான வாக்காளா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனா் என்றாா்.