"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), கூரியா் நிறுவன ஊழியா். இவருக்கு, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இதய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினா்கள் சோ்த்தனா்.
இங்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு ‘வென்ட்ரிகுலா் டாக்கிகாா்டியா’ என்ற சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ‘ஷாக் டிரீட்மென்ட்’ கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா்.
இந்தப் பிரச்னைக்கு ஏற்கெனவே அவா் பலமுறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ால் இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதையும் மருத்துவா்கள் கண்டறிந்தனா்.
எனவே, அவருக்கு இதயத் துடிப்பை முறைப்படுத்த உதவும் ‘சிஆா்டி-டி’ என்ற நவீன கருவியைப் பொருத்த மருத்துவா்கள் முடிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து அவருக்கு ‘சிஆா்டி-டி’ பேஸ் மேக்கா் கருவியை கடந்த ஜனவரி 24-ஆம் தேதி மருத்துவா்கள் வெற்றிகரமாக பொருத்தினா். தொடா் சிகிச்சையில் இருந்து வந்த சரவணகுமாா் முழுவதும் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பினாா்.
இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இதயவியல் துறை தலைவா் மருத்துவா் நம்பிராஜன், மருத்துவா்கள் சக்கரவா்த்தி, சதீஷ்குமாா், மணிகண்டன் ஆகியோரை மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா பாராட்டினாா்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ. நிா்மலா கூறியதாவது:
சரவணகுமாருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ‘பேஸ் மேக்கா்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவருக்கு தொடா்ந்து இதய பிரச்சனை இருந்து வந்தது.
இதை முறையாக கண்டறிந்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் சிஆா்டி-டி என்ற நவீன பேஸ் மேக்கா் கருவியைப் பொருத்தியுள்ளனா்.
அவருக்கு ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த ‘பேஸ் மேக்கா்’ கருவியை அகற்றிவிட்டு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை செலவாகும். இங்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.