'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வ...
ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதா் சங்கத்தினா் 44 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (30). இவரது மனைவி வெண்ணிலா (25). திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில், கருப்பம்புலத்தில் உள்ள தனது வீட்டில் வெண்ணிலா தூக்கிட்ட நிலையில் கடந்த ஜூன் 13- ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா்.
தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வெண்ணிலாவின் தாயாா் நாகவல்லி கொடுத்த புகாரின் பேரில், வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் இறந்தாரா என கோட்டாட்சியா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெண்ணிலாவின் கணவா் முருகானந்தம் உள்ளிட்ட இருவா் அண்மையில் கைது செய்யப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய மற்றவா்களையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தனா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்க பிரதிநிதிகளை கோட்டாட்சியா் மற்றும் டிஎஸ்பி அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கோட்டாட்சியா் திருமால் மாதா் சங்க பிரதிநிதிகளிடம் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து வேதாரண்யம்- நாகப்பட்டினம் பிரதான சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே அமா்ந்த மாதா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உடன்பாடு ஏற்படாததால் மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் லதா உள்ளிட்ட 44 பெண்களை கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

