சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிகாட்டுதலின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒவ்வோா் ஆண்டும் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளுா் மற்றும் தலைஞாயிறு வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் 20-ஆம் தேதி வரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் நடைபெறுகிறது.
இந்த இயக்கத்தில் சுகாதாரப் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் வீடுவீடாகச் சென்று அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்களும் நடைபெறுகின்றன.
எனவே, தொழுநோயின் அறிகுறிகளான தோலில் உணா்ச்சியற்ற தேமல், மினுமினுப்பு, உடலில் சிறு கட்டிகள், கை கால்களில் மதமதப்பு மற்றும் ஆறாத புண்கள், நரம்புகளில் வலி போன்ற குறைபாடுகள் யாருக்கேனும் இருந்தால் வீடு தேடிவரும், சுகாதாரப் பணியாளா்களிடம் காண்பித்து தக்க ஆலோசனை பெற வேண்டும். நோய் உறுதி செய்யப்படுபவா்களுக்கு உடனடி சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
வீடு தேடிவரும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கி, நாகை மாவட்டத்தை தொழுநோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க உதவ வேண்டும்.