ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?
டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபருடன் நிறைவடையும் நிலையில், பி.பி. பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். டாடா நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான உத்தியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் இவருக்கு, தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
யார் இந்த பாலாஜி?
தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 1992 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் பி.டெக். மெக்கானிக்கல் பட்டம் பெற்றார். பின்னர், 1993 ஆம் ஆண்டு கொல்கத்தா ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
யூனிலீவர் நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கிய பாலாஜி, நிறுவனத்தின் மூத்த நிதி மேலாண்மை அதிகாரியாக இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். 2017 வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
டாடா குழுமத்தின் கீழ் உள்ள டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், டாடா பயணிகள் மின்சார மொபிலிட்டி, டாடா மோட்டார்ஸ் நிதி குழுமம், ஏர் இந்தியா, டைட்டன் நிறுவனம், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், அக்ராடாஸ் லிமிடெட் (யுகே) மற்றும் அக்ராடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாரிய (போர்ட்) உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.