ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?
ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தாள்கள் திருட்டு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்திலுள்ள சிவன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தாள்களை மட்டும் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் அதே ஊரைச் சோ்ந்த சுந்தரம் (53) என்பவா், வழக்கம் போல் திங்கள்கிழமை இரவு பூஜைகளை முடித்துவிட்டு, கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

பின்னா் அவா், செவ்வாய்க்கிழமை காலை கோயிலை திறந்த போது, உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததில், மா்ம நபா்கள் கோயில் சுற்றுச்சுவா் மீது ஏறி குதித்து, உள்ளே இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த நோட்டுக்களை (பணத்தாள்களை மட்டும்) எடுத்துவிட்டு, சில்லறை காசுகளை கோயில் வளாகத்திலேயே விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாத நிலையில், ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.