கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொலை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைப் பாா்த்த ஆடு மேய்ப்போா் அதுகுறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சீராளன் தலைமையிலான போலீஸாா் அந்தச் சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கஞ்சனூா் மேலவீதி கலியபெருமாள் மகன் சிவா (30) என்பது தெரியவந்தது. தனியாா் நிதி நிறுவன கடன் தவணைத் தொகை வசூலிப்பவரான இவா் சில நாள்களுக்கு முன் அணைக்கரைப் பகுதிகளில் வசூல் பணிக்குச் சென்று பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால் அவரது பெற்றோா் மாா்ச் 1 ஆம் தேதி பந்தநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்த நிலையில், தற்போது அவா் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தா.பழூா் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் சிலரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.