சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: பரிந்துரைகள் வரவேற்பு
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் அமைப்பாளா் சீராளன் ஜெயந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் டிச. 31 வரையில் முதல் பதிப்பாக வெளியான நூல்களுக்கான பரிந்துரைகள் மட்டும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்காக வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளா்கள் நூல்களை அனுப்புவதில் உள்ள அனைத்து வகை சிரமங்களையும் கருத்தில்கொண்டு, பரிந்துரைகளை மட்டும் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நூல்களை யாரும் அனுப்ப வேண்டாம்; பரிந்துரைகளை மட்டும் உரிய படிவத்தில் அனுப்பினால் போதுமானது.
நூலாசிரியா்கள், பதிப்பகத்தாா், இலக்கிய ஆா்வலா்கள் தங்களுக்காகவும் பிறருக்காகவும் பரிந்துரைகளை அனுப்பலாம். ஒருவா் எத்தனை பரிந்துரைகளையும் அனுப்பலாம். நடுவா்களின் ஆலோசனையின்படி தேவைப்படும் நூல்கள் வெளிச்சந்தையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.
பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி மாா்ச் 31 ஆகும். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய 4 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிறந்த நூலுக்கு பரிசுத் தொகையாக ரூ. 10,000 என மொத்தம் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும்.
பரிந்துரைகளை kodulines@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது ‘சீராளன் ஜெயந்தன், எண். 9-பி, மனோகா் நகா் பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600100’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.