ஜெயிலர் - 2 அறிவிப்பில் ஏன் தாமதம்?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.
இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.
இதையும் படிக்க: விஜய் - 69 பெயர் போஸ்டர் அப்டேட்!
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளான்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வரவில்லை.
புத்தாண்டு அன்று அறிவிக்கப்படலாம் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கான எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில்,கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ஜெயிலர் - 2 அறிவிப்பு வெளியாகலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் மாதம் சென்னையில் துவங்கலாம் எனத் தெரிகிறது. இதற்கான, செட் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.